தாளவாடி அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட எலும்பு துண்டுகள் கிடந்த தோட்டத்தை தாசில்தார் ஆய்வு
‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலி காரணமாக, தீ வைத்து எரிக்கப்பட்ட எலும்பு துண்டுகள் கிடந்த தோட்டத்தை தாசில்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிராமம் தர்மாபுரம். இந்த கிராமத்தில் உள்ள தோட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் கரும்புகை வந்தது. மேலும் கரும்புகையுடன் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கிராம மக்கள் அந்த தோட்டத்தை சென்று பார்த்தனர். அப்போது அங்கு குவியல் குவியலாக கிடந்த சாக்கு மூட்டைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி‘ நாளிதழில் நேற்று பிரசுரமாகி இருந்தது.
இந்த நிலையில் தாளவாடி தாசில்தார் பெரியசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்தில் எலும்பு துண்டுகள் வெந்தநிலையில் காணப்பட்டன. பின்னர் இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த தோட்டம் தாளவாடியை சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கு சொந்தமானது என்றும், கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த தோட்டத்தை கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்ததும்,‘ தெரியவந்தது. மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘கேரளாவை சேர்ந்தவர் இந்த தோட்டத்தில் குப்பை கழிவுகள் மற்றும் மாடுகளின் எலும்பு துண்டுகளை கொட்டி உள்ளார். இந்த எலும்பு துண்டுகள் அனைத்தும் மக்கிய பிறகு உரமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தார்.
இதற்கிடையே சாக்கு மூட்டைகளில் உள்ள எலும்பு துண்டுகளுக்கு தீ வைத்ததால் துர்நாற்றம் வீசியுள்ளதையும்,‘ கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து எலும்பு துண்டு கழிவுகளை தோட்டத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பெரியசாமி தோட்ட உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.