ஆலங்குடி அருகே தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஆலங்குடி அருகே தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:30 AM IST (Updated: 26 Jun 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி ஊராட்சியில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு சார்பில் 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாத காலமாக குடிநீர் சேரும், சகதியும் கலந்து வந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும், தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் முறையாக தூய்மையான குடிநீர் வழங்க கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் புதுக்கோட்டை -கறம்பக்குடி சாலையில் சம்பட்டிவிடுதி தபால் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். கலங்கலான குடிநீரையும் பாட்டிலில் பிடித்து வந்திருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி மற்றும் சம்பட்டிவிடுதி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரவேலன் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக தூர்வார ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story