அமைச்சர் அலுவலகங்களுக்கு பொருட்கள் வாங்கிய விவகாரம்: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு


அமைச்சர் அலுவலகங்களுக்கு பொருட்கள் வாங்கிய விவகாரம்: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 26 Jun 2019 5:15 AM IST (Updated: 26 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

அரசு சார்பு நிறுவன கணக்கில் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு பொருட்கள் வாங்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படாததால் அந்த நிறுவனங்களை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நிர்வகித்து வருகின்றனர். மேலும் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை தங்கள் துறைகளுக்கு கீழ் உள்ள சார்பு நிறுவன கணக்கில் இருந்து வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் வருவாய்த்துறை அமைச்சரான ஷாஜகான் தனது அலுவலகத்துக்கு சேர், எலக்ட்ரிக் ஸ்டவ், வேக்குவம் கிளீனர் (அறையை சுத்தம் செய்யும் கருவி) உள்ளிட்ட பொருட்களை ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்து 151–க்கு வாங்கி உள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சரான கந்தசாமி தனது அலுவலக தேநீர் செலவுக்காக பாட்கோ நிறுவன கணக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 4 மாதங்களில் ரூ.15 ஆயிரத்து 980 வாங்கியுள்ளார்.

இந்த தகவல்களை ராஜீவ்காந்தி மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்றுள்ளார்.

அமைச்சர்களின் செலவுகளை அமைச்சரவை அலுவலக கணக்கில் இருந்து மேற்கொள்ளும்போது பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பெறுவது அவற்றுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாகவும், இதில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவர்னர் கிரண்பெடி, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு (புதுச்சேரி தலைமைச் செயலாளரின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்பு பிரிவு) உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாசிக், பாப்ஸ்கோ, பிப்டிக் உள்ளிட்ட 12 அரசு சார்பு நிறுவனங்களுக்கு ரூ.716 கோடியே 54 லட்சம் அரசு வழங்கியுள்ள நிலையில் அவற்றின் மூலம் ரூ.640 கோடியே 29 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களில் 4 ஆயிரத்து 778 பேர் பணிபுரிந்து வருவதாகவும் மற்றொரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story