புதுச்சேரியில் வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும்; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்


புதுச்சேரியில் வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும்; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Jun 2019 5:00 AM IST (Updated: 26 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர், கடலூர் மண்டல தலைவர் சண்முகம், விழுப்புரம் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தில் சென்னையில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் பஞ்சத்தால் பெரும் பாதிப்புகளை வியாபாரிகள் சந்தித்து வருகின்றனர். மாநில அரசு சென்னையில் 6 மாத காலத்துக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

அதேபோல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடை சட்டத்தால் பல்வேறு பாதிப்புகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். புதுச்சேரி அரசும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதனை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்கு மாற்றுப்பொருளை கண்டுபிடித்து உற்பத்தி செய்த பிறகே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் 24 மணிநேரமும் கடைகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி வியாபாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையில் பிரச்சினையில் ஈடுபடும் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். புதுச்சேரியில் வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story