குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2019 4:30 AM IST (Updated: 26 Jun 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மற்றும் விடுதிகள், இல்லங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் காலாண்டுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கான விடுதிகள் ஆகியவைகள் முறையாக அனுமதி பெற்றுள்ளதா?, எத்தனை விடுதிகள் செயல்பாட்டில் உள்ளன, அங்கு விதிகளுக்கு உட்பட்டு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதா? என்றும், குழந்தைத்தொழிலாளர் மற்றும் குழந்தைத் திருமணத்தை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

பின்னர் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அனுமதியின்றி நடத்தப்படுகிறதா?

கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பள்ளிகளில் விடுதிகள் நடத்தப்படுகின்றதா? என்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு வாரகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனி நபரால் நடத்தப்பட்டு வரும் விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கு ஒருவார காலத்திற்குள் பதிவு செய்யத் தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தும் வகையிலான அறிவிப்பாணைகளை வழங்க வேண்டும்.

ஒருவார காலத்திற்கு பிறகும் எந்த முயற்சியும் செய்யாத இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது சட்டத்திற்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

பதிவு பெறாத விடுதிகள் ஏதேனும் கரூர் மாவட்டத்தில் செயல்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யப்படாமல் விடுதிகள் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை 9488985964 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குழந்தை திருமணங்களை நடத்தி வைப்பவர்கள், குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்துவோர், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் தங்கள் புகாரை தெரிவிக்க POCSO E-BOX இணையதள செயலி மூலம் பதிவு செய்வது குறித்து மாணவர்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கவிதா, மாவட்ட சமூகநல அதிகாரி ரவிபாலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story