ராமேசுவரத்தில் கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் அரசு கல்லூரி தொடங்க கோரிக்கை
ராமேசுவரத்தில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அரசு கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட ராமேசுவரம் தீவு பகுதியில் அரசு கல்லூரி ஒன்றுகூட கிடையாது. இதனால் பிளஸ்–2 முடித்த பின்பு மாணவர்கள் மேற்படிப்புக்காக சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமநாதபுரத்திற்கோ, அல்லது வெளி மாவட்டங்களுக்கோ சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே இப்பகுதி மாணவ–மாணவிகளின் நலன் கருதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் ராமேசுவரத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
ஆனால் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் ராமேசுவரத்தில் கோவிலுக்கு சொந்தமான பெரிய கட்டிடத்தில் தற்காலிகமாக அரசு கலைக்கல்லூரியை இந்த ஆண்டே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ராமேசுவரம் தீவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் களஞ்சியம், முருகன் உள்ளிட்டோர் கூறுகையில், “ராமேசுவரம் ராமர்பாதம் செல்லும் சாலையில் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான பெரிய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தான் பல வருடங்களாக ஜெயேந்திர சரசுவதி கல்லூரி செயல்பட்டு வந்தது. நாளடைவில் அந்த கல்லூரியும் மூடப்பட்டு விட்டது.
இதையடுத்து பல வருடங்களாக அந்த கட்டிடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் பூட்டிக்கிடக்கிறது. எனவே ராமேசுவரத்தில் புதிய கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் வரையிலும் தற்காலிகமாக இந்த கட்டிடத்தில் அரசு கலைக்கல்லூரியை திறந்து செயல்படுத்த வேண்டும். என்றனர்.