சென்னைக்கு தினமும் இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பெட்டி இல்லாமல் பெண்கள் அவதி


சென்னைக்கு தினமும் இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பெட்டி இல்லாமல் பெண்கள் அவதி
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 8:59 PM GMT)

கன்னியாகுமரி- சென்னை இடையே தினமும் இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பெட்டி இல்லாமல் பெண்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் சென்னைக்கு இயக்கப்படும் ஒரே ரெயில் என்ற பெருமையை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெற்றுள்ளது. இந்த ரெயில் தினமும் கன்னியாகுமரியில் இருந்து இருந்து 5.20 மணிக்கும், நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 5.40 மணிக்கும் சென்னைக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடைகிறது.

13 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் இந்த ரெயில் சென்று வருவதால் குமரி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற ரெயிலாகவும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இருந்து வருகிறது. குறித்த நேரத்தில் சென்று சேரும் என்பதால் வழியோர மாவட்ட ரெயில் பயணிகள் அபிமானத்தையும் இந்த ரெயில் பெற்றுள்ளது.

வசதி

எனவே இந்த ரெயிலில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் முதல் ஆசிரியர்கள் வரையிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள், வணிக ரீதியாக, மருத்துவ சிகிச்சைக்காக செல்லக்கூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த ரெயிலில் பயணம் செய்யக்கூடியவர்கள் காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் சென்னை மற்றும் கன்னியாகுமரியை சென்று சேருவதால், அவரவர் பணிபுரியும் இடங்களுக்கோ, அலுவல் ரீதியாகவோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து புறப்பட்டுச் செல்ல வசதியாக இருந்து வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இந்த ரெயிலில் கூட்டம் அளவுக்கதிமாக இருந்து வருகிறது. ஒரு நாள் கூட இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கை காலி என்பதை பார்க்க முடியாது.

முண்டியடிப்பு

ஒவ்வொரு நாளும் இருக்கை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை பலநூறு என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இது முன்பதிவு பெட்டிகளின் நிலை என்றால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பல நூறுபேர் தினமும் நெருக்கியடித்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவாறு பயணித்து வருகிறார்கள். முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் பிடிப்பதற்காக நாகர்கோவிலில் இருந்து ஏறக்கூடிய பயணிகள் பலர் இந்த ரெயில் புறப்படும் இடமான கன்னியாகுமரிக்கு சென்று இருக்கைகளைப் பிடித்து அமர்ந்து வருகிறார்கள். இதனால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும், நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் இருக்கை பிடிப்பதற்காக ஆண்களும், பெண்களும் முண்டியடிப்பதை பார்க்கும்போது, அதிலும் பெண்கள் படும்பாட்டை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கும்.

எனவே பயணிகளின் நன்மதிப்பையும், தனித்துவத்தையும் கொண்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழைய பெட்டிகள் அதாவது 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தபோது ரெயிலின் கடைசிப்பகுதியில் கார்டு பெட்டிக்கு அருகில் மகளிருக்கென தனிப்பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது. இந்த பெட்டியில் பெண்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். இது தனியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றக்கூடியவர்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வந்தது.

ஒரு பெட்டி குறைப்பு

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் எல்.எச்.பி. என்ற நவீன பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படுகிறது. முன்பு இயக்கப்பட்ட சாதாரண ரெயில் பெட்டியில் 72 இருக்கைகள்தான் இருக்கும். ஆனால் இந்த எல்.எச்.பி. பெட்டியில் 80 இருக்கைகள் கொண்ட பெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் பழைய ரெயில் பெட்டிகளைவிட இந்த ரெயில் பெட்டி சற்று நீளமானதாக உள்ளது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 22 பெட்டிகளுக்கு பதிலாக 21 பெட்டிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. மகளிருக்கான தனிப்பெட்டியை நீக்கி விட்டார்கள்.

இதனால் பெண்கள், மாணவ- மாணவிகள், கர்ப்பிணிகள், மூதாட்டிகள் போன்ற அனைத்து தரப்பு பெண்களும் பொது முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே ஆண்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளில் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு ஏறவேண்டியதாக உள்ளது. மேலும் ஆண்கள் பெட்டியின் வழிப்பாதை, நடைபாதை, கழிப்பறை பகுதி என அனைத்து பகுதியிலும் நின்று கொண்டிருப்பதால் பெண்கள் கழிப்பறைக்குகூட செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

எனவே பெண்களுக்கு வழக்கம்போல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பெட்டி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பெண்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. கூடுதலாக ஒரு பெட்டியை இந்த ரெயிலில் இணைக்க முடியாவிட்டாலும் இருக்கிற பெட்டிகளில் ஒன்றை பெண்களுக்கென்று ஒதுக்க வேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பெண்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

ஆண்களால் தொல்லைகள்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையான ஜெயச்சந்திரா ஜேக்கப் என்பவர் கூறியதாவது:-

எனது மகன் மற்றும் மகள் சென்னையில்தான் வசித்து வருகிறார்கள். இதனால் நான் அடிக்கடி சென்னை சென்று வருகிறேன். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் குறித்த நேரத்தில் மட்டுமின்றி, காலையிலேயே சென்று சேர்ந்துவிடும் என்பதால் நான் இந்த ரெயிலில்தான் பயணிப்பது வழக்கம். பழைய பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட்டபோது பெண்களுக்கு என்று தனிப்பெட்டியுடன் இயக்கப்பட்டது. தற்போது புதிய பெட்டிகளுடன் இயக்கப்படும்போது பெண்கள் தனிப்பெட்டியை அகற்றிவிட்டனர். குடும்பத்தோடு செல்லும்போது பெண்களுக்கு பயம் இல்லை. பெண்கள் தனியாகச் செல்லும்போது பெண்களுக்கான தனிப்பெட்டிதான் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும். மேலும் கூட்ட நேரத்தில் ஆண்களுடன் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு அல்லாத பொது பெட்டியில் இடம்பிடிக்கவும் முடியாது. அப்படியே முண்டியடித்து ஏறினாலும் ஆண்கள் மத்தியில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் பெண்களுக்கு பல்வேறு விதத்தில் ஆண்களால் தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெண்களுக்கு வழக்கம்போல் இந்த ரெயிலில் தனிப்பெட்டி இணைக்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்லின் ராணி என்பவர் கூறியதாவது:-

நான் பல்வேறு அலுவல் காரணமாக அடிக்கடி சென்னை சென்று வருகிறேன். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் தனிப்பெட்டி இல்லாததால் நான் உள்ளிட்ட பெரும்பாலான பெண்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறோம். ஆண்கள் அடித்து, பிடித்துக் கொண்டு முன்பதிவு அல்லாத பொதுப்பெட்டியில் ஏறி இடம் பிடித்து அமர்ந்து விடுகிறார்கள். பெண்கள் ஜன்னல் வழியாக பேக் மற்றும் உடைமைகளை வைத்து இடம் பிடித்தாலும் அதை தள்ளிவிட்டு ஆண்கள் அமர்ந்து விடுகிறார்கள். மேலும் ஆண்கள் நடக்கும் பாதைகள், பெட்டியின் வாயில், கழிப்பறை பகுதி என அனைத்துப் பகுதியிலும் அமர்ந்து விடுகிறார்கள். இதனால் இடம் கிடைக்காமல் நிற்கக்கூடிய பெண்கள் தாங்கள் நின்ற நிலையிலேயே அசையாமல் 13 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கழிப்பறை பகுதியிலும் ஆண்கள் அமர்ந்திருப்பதால் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறைக்கும் செல்ல முடியாமல் 13 மணி நேரம் பெண்கள் அவதிப்படுகிறார்கள். ரெயிலில் பஸ்சைவிட கட்டணம் குறைவு என்பதால் மகன் மற்றும் மகளைப் பார்க்க குமரியில் இருந்து சென்னை செல்லும் முதியவர்கள் படும்பாடு பெரும்பாடுதான். அதிலும் மூதாட்டிகள் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. இதுதொடர்பாக சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தனிப்பெட்டி இல்லாததால் தனியாக பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில்தான் பயணம் செய்ய வேண்டியதாக உள்ளது. எனவே வழக்கம்போல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மகளிருக்கு என்று தனிப்பெட்டி இயக்க வேண்டும். கூடுதலாக ஒரு பெட்டி இயக்க முடியவில்லை என்றாலும் இருக்கிற பெட்டிகளில் ஒன்றை மகளிருக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.


Next Story