கிராமப்பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை; விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரியும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
தாயில்பட்டி,
மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கிராமப்பகுதிகளில் 3 கிலோ மீட்டர் தூரம் முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. மேலும் விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படாததால் கிராமப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலைதிட்டத்தில் அனைவருக்கும் உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
வெம்பக்கோட்டையில் நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியன், தலைவர் முனியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பொன்னையா, சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கூடலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் அரசு அறிவித்தபடி 100 நாள் திட்டத்தில் வேலை செய்வோருக்கு ரூ.229 வழங்கிட வேண்டும், பேரூராட்சி பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்துவேல், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.
காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தி மனுக்கள் கொடுத்தனர்.