பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு அமலாவது எப்போது? அதிகாரி பதில்


பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு அமலாவது எப்போது? அதிகாரி பதில்
x
தினத்தந்தி 26 Jun 2019 5:00 AM IST (Updated: 26 Jun 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு அமலாவது எப்போது என்பது குறித்து பெஸ்ட் குழும அதிகாரி பதில் அளித்துள்ளார்.

மும்பை,

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமம் மும்பை, தானே, நவிமும்பை இடையே 483 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 337 பஸ்களை இயக்கி வருகிறது. இவற்றில் 120 எண்ணிக்கையில் மாடி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் சேவைகளை மின்சார ரெயில் சேவைகளுக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

பெஸ்ட் பஸ்சில் அதிக கட்டணம் காரணமாக 45 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது. தற்போது 27 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.

தற்போது பெஸ்ட் பஸ்கள் தினசரி ரூ.2 கோடி நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், பெஸ்ட் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பயண கட்டணத்தை அதிரடியாக குறைக்க பெஸ்ட் குழுமம் முடிவு செய்தது. இதன்படி சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.20-யும் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல ஏ.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 6 ரூபாயாகவும், அதிபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு பெஸ்ட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.

பஸ் கட்டண குறைப்புக்கு பெஸ்ட் கமிட்டி ஒப்புதல் அளித்து உள்ளநிலையில், விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பில் மும்பைவாசிகள் உள்ளனர்.

இதுபற்றி பெஸ்ட் குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், பஸ் கட்டண குறைப்பு திட்டம் இறுதி ஒப்புதலுக்காக மாநகராட்சியிடம் அனுப்பப்படும். மாநகராட்சி ஒப்புதல் அளித்த பின்னர் பஸ் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் தேதி அறிவிக்கப்படும், என்றார்.

Next Story