பேரையூரில் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்


பேரையூரில் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:15 PM GMT (Updated: 25 Jun 2019 9:25 PM GMT)

குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் சரிவர வருவதில்லை என கூறி பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு செய்தனர்.

பேரையூர்,

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பேரையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். ஆனால் அந்த கூட்டத்தில் பெயரளவிற்கு ஒருசில துறைகளின் அலுவலர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, கடந்த பருவத்தில் மக்கா சோள பயிரில் படைப்புழுக்கள் தாக்கி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. பேரையூர் பகுதியில் நீர்நிலைகளில் தொடரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் உழவடை பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. காட்டு பன்றிகளால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணம் உடனடியாக வழங்கவேண்டும். குடிநீரை மின்மோட்டார் வைத்து எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. விவசாயிகள் கூட்டத்தில் கூறப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்கள்.

பின்னர் தொடர்ந்து நாங்கள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு பதில் தர பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டங்களுக்கு வருவதில்லை என்று கூறி விவசாயிகள் பலர் கூட்டத்தை புறக்கணித்து, அரங்கை விட்டு வெளியேறினர். பின்னர் தாசில்தார் ஆனந்தி, கூட்டத்தை நடத்தினார். சிட்டுலொட்டியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அங்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டேரா பாறை அணை திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும். இந்த பகுதியில் விவசாயதிற்கு தேவையான தண்ணீரை தேக்கும் திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வனத்துறை பகுதிகளில் மாடுகள் மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மிஞ்சியிருந்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பின்னர் தாசில்தார் ஆனந்தி பேசும்போது, கொடுக்கப்பட்ட மனுக்களையும், கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story