கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி, திண்டுக்கல் கோர்ட்டில் 7 மாவோயிஸ்டுகள் ஆஜர்
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜராகினர்.
திண்டுக்கல்,
கொடைக்கானல் வடகவுஞ்சி மலைப்பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் நவின்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். மேலும் 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மாவோயிஸ்டுகளான கண்ணன், ரஞ்சித், நீலமேகம், காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோரை கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். இதில் ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். மேலும் காளிதாஸ் கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த கோர்ட்டில் கொடைக்கானல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டனர். அதன் நகல் 7 பேருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதற்கிடையே நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையொட்டிக் கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து கேரள சிறையில் இருப்பவர் உள்பட 5 பேர் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கண்ணன், மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆதரவாக கோஷமிட்டபடி வந்தார். இதேபோல் ஜாமீனில் வெளியே இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது ஜாமீனில் இருப்பதால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை நீலமேகம் கேட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜமுனா உத்தரவி்ட்டார்.
Related Tags :
Next Story