கள்ளக்காதலுக்கு இடையூறு, சிமெண்டு கடை உரிமையாளர் கொலை வழக்கில் வாலிபர் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறு, சிமெண்டு கடை உரிமையாளர் கொலை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2019 4:45 AM IST (Updated: 26 Jun 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிமெண்டு கடை உரிமையாளரை கொன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 38). இவர் ஓமலூர்-தர்மபுரி மெயின் ரோட்டில் சிமெண்டு கடை நடத்தி வந்தார். கடந்த 16-ந் தேதி இரவு நாராயணன் தனது கடைக்குள் படுத்து தூங்கினார். மறுநாள் காலை கடைக்குள் தலையில் பலத்த காயத்துடன் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அங்கு வந்த ஓமலூர் போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் நேற்று முன்தினம் இறந்தார்.

முன்னதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், நாராயணன் இறந்ததால் கொலை வழக்காக மாற்றி, அவரை தாக்கி கொன்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் காமலாபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று போலீசார் சுரேசை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட நாராயணனின் அண்ணன் மனைவிக்கும், சுரேசிற்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நாராயணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நாராயணனை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 16-ந் தேதி இரவு, சிமெண்டு கடைக்குள் தனியாக நாராயணன் தூங்குவதை அறிந்து சுரேஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த கல்லை எடுத்து, அவரது தலையில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஆனால் நாராயணன் இறந்து விட்டதாக நினைத்து சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். தற்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


Next Story