குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவி கழுத்தை அறுத்து கொலை - தொழிலாளி வெறிச்செயல்


குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவி கழுத்தை அறுத்து கொலை - தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:45 AM IST (Updated: 26 Jun 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

மல்லூர் அருகே குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் வெடிகாரன் புதூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 45), மரம் அறுக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமணி (37). இவர்களுக்கு மவுனிகா (20) என்ற மகளும், ரவி (17) என்ற மகனும் உள்ளனர். மவுனிகாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் ஆகி விட்ட நிலையில், பாலசுப்ரமணி தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பாலசுப்ரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்து வந்துள்ளார். மேலும் தன்னிடம் பணம் இல்லாத நேரத்தில் தங்கமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் பாலசுப்ரமணியிடம் தகராறு ஏற்பட்டால் கோபித்துக்கொண்டு தங்கமணி அருகில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விடுவார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தங்கமணி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள, தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று காலை பாலசுப்ரமணி தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கமணி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது பாலசுப்ரமணி, மனைவி தங்கமணியை தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணி வீட்டில் இருந்த அரிவாளால் தங்கமணியின் கழுத்தை அறுத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். படுகாயம் அடைந்த தங்கமணி அருகில் இருந்த துணியை எடுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட பக்கத்தில் இருந்த தனது தம்பியின் வீட்டுக்கு ஓடி உள்ளார். அங்கு சென்ற அவர் தம்பியிடம் தன் கணவர் கழுத்தை அறுத்து விட்டதாக கூறி விட்டு வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமணியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பாலசுப்ரமணியை வலைவீசி தேடி வருகிறார்கள். மனைவியை கொன்ற தொழிலாளியின் வெறிச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story