விருத்தாசலம் அரசு பள்ளியில், ரூ.1 லட்சம் மதிப்பிலான குழாய்கள் திருட்டு - போலீஸ் விசாரணை


விருத்தாசலம் அரசு பள்ளியில், ரூ.1 லட்சம் மதிப்பிலான குழாய்கள் திருட்டு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:45 PM GMT (Updated: 26 Jun 2019 12:28 AM GMT)

விருத்தாசலம் அரசு பள்ளியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான குழாய்களை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மூலம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 36.97 லட்சம் மதிப்பில் நவீன கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது.

ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், அதிநவீன வசதியுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால், விரைவில் திறப்பு விழா நடைபெற இருந்தது.

இந்த நிலையில், இந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த ஜன்னல் ஒன்று உடைந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் கழிவறையை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு மாயமாகி இருந்தன. இதன் மூலம் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள், குழாய்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story