வைகை அணையில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறப்பு - பொதுமக்கள் குற்றச்சாட்டு
வைகை அணையில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் 31 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பும் குறைவாக உள்ளது. அணையில் இருக்கும் தண்ணீர், குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லாத நிலையில் வினாடிக்கு 60 கனஅடி வீதம் குடிநீருக்காக திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு மேல் இருந்தால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தால் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே மிகவும் குறைவாக நீர்இருப்பு உள்ள வைகை அணையில் இருந்து முறைகேடாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையின் ‘பிக்அப் டேம்’ மதகு பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவோடு சேர்த்து கணக்கிடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். ஆனாலும், முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரியும் நிலைமை உருவாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு, அணையில் தண்ணீர் திறப்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story