ஈரோடு மாவட்டத்தில் 3,199 குக்கிராமங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற ரூ.11¾ கோடியில் திட்டங்கள்; கலெக்டர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 3,199 குக்கிராமங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற ரூ.11¾ கோடியில் திட்டங்கள்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 3:45 AM IST (Updated: 27 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 199 குக்கிராமங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற ரூ.11¾ கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்டு உள்ள வறட்சியை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் நடப்பு மாதம் வரை பல்வேறு புதிய பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

குறிப்பாக 14–வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 168 பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2 கோடியே 78 லட்சம் மதிப்பில் 74 பணிகளும், சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 12 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 156 பணிகள் ரூ.4 கோடியே 61 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ளன.

தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் செலவில் 3 பணிகளும், உபரி நிதியின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் 90 பணிகளும் நடந்து வருகின்றன.

மொத்தம் ரூ.11 கோடியே 85 லட்சம் செலவில் 503 பணிகள் நடந்து வருகின்றன. இதில் 384 திட்டப்பணிகள் நிறைவடைந்து விட்டன. 119 பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிக்கப்படும். இந்த குடிநீர் திட்டங்கள் முழுமையாக, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். அப்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 199 குக்கிராமங்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story