கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது: டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது: டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இதுதவிர இந்த காவிரி டெல்டா மாவட்டங்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்து போதிய அளவு நீர்வரத்து இருந்தால் மட்டுமே ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லாததால் குறிப்பிட்ட தேதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த ஆண்டு கூட, ஜூன் மாதத்திற்கு பிறகு தான் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது. இதனால் கடந்த 2018 ஜூலை மாதம் 19-ந் தேதி தான் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தற்போது அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.

44 அடியாக குறைந்தது

குறிப்பாக நேற்று அணையின் நீர்மட்டம் 44 அடியாக குறைந்து உள்ளது. இதனால் அணை குட்டை போல் காட்சி அளிக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 271 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 8-வது ஆண்டாக தொடர்ந்து இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தம் 40.43 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவுக்கு கர்நாடக மாநிலத்தில் வழக்கம் போல் எதிர்ப்பு கிளம்பியது. மைசூரு, மாண்டியா, ராம்நகர் விவசாயிகள் நேற்று முன்தினம் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அணைகளில் குடிநீருக்கே போதிய அளவு தண்ணீர் இல்லை, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும்? என்று அவர்கள் கேள்வி கேட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கர்நாடக அணைகள் நிலவரம்

அதே நேரத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவதில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நேற்றைய நீர்மட்டம் 79.74 அடியாக இருந்தது. அதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நேற்றைய நீர்மட்டம் 2,257.22 அடியாக இருந்தது. இதன்மூலம் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் ஓரளவு குறிப்பிடும்படி இருப்பதை காட்டுகிறது.

கர்நாடகாவில் போதிய மழை இல்லை என்றும், அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதாகவும் கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் தற்போதைய காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடம் எழுந்துள்ளது. மேலும் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story