காதலித்து திருமணம் செய்த 13 நாட்களில் புதுப்பெண் தற்கொலை திருச்சி உதவி கலெக்டர் விசாரணை


காதலித்து திருமணம் செய்த 13 நாட்களில் புதுப்பெண் தற்கொலை திருச்சி உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2019 3:45 AM IST (Updated: 27 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்த 13 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி திருச்சி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மலைக்கோட்டை,

திருச்சி மாவட்டம் பெரமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கோகிலா(வயது 25). இவர், மண்ணச்சநல்லூரில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பூனாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்(24). இவர், மண்ணச்சநல்லூரில் தையல் கடை வைத்திருந்தார்.

கோகிலாவும், மோகனும் மண்ணச்சநல்லூருக்கு பணி நிமித்தமாக வந்து சென்றதால், அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது காதல் விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.

பதிவு திருமணம்

இதற்கிடையே கோகிலா தைராய்டு பிரச்சினை காரணமாக, ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி கோகிலா, தனது பெற்றோரிடம் திருச்சியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு மேக்கப்போட செல்வதாக கூறிவிட்டு திருச்சி வந்தார். மோகனும் திருச்சி வந்தார்.

பின்னர், நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 13-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி மேலசிந்தாமணி சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து புதுமண தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் மோகன் வேலைக்கு சேர்ந்தார்.

வாட்ஸ் அப்பில் திருமணப்படம்

இந்தநிலையில் கோகிலா-மோகன் பதிவு திருமணம் செய்து கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் கோகிலாவின் பெற்றோர் செல்போனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஒருவர் அனுப்பி வைத்தார். அதன் பின்னரே மகள் காதல் பதிவு திருமணம் செய்து கொண்ட விவரம் அவர்களுக்கு தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த கோகிலா, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமே என்று மனவேதனை அடைந்தார். மேலும் தைராய்டு பிரச்சினை காரணமாக அவர் அவதி அடைந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மோகன் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் கோகிலா மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், கோகிலா உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதல் திருமணம் செய்த 13 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story