மணல் திருட்டை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


மணல் திருட்டை தடுக்க  போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 26 Jun 2019 10:45 PM GMT (Updated: 26 Jun 2019 8:26 PM GMT)

மணல் திருட்டை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி தெற்கு பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், தன்வந்திரி, சிவக்குமார், வீரபத்திரசாமி, சந்திரசேகர், ராஜன், வடிவழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலீசாருக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:–

ரோந்து செல்லும் போலீசார் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்களின் வீடுகளில் உள்ள பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடும் பழக்கத்தினை மீண்டும் நடைமுறை படுத்தவேண்டும். முக்கிய சந்திப்புகள், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவேண்டும்.

அரிக்கன்மேடு, கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மணல் திருட்டை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளும் மாலை நேரத்தில் ரோந்து பணியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story