கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பாளருமான பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்தும், ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள், பர்கூர் துரைஸ் நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. டிராக்டரில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாக தெரிவித்தனர். மேலும், பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோதியழகனூர் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கோதியழகனூர் கிராமத்திற்கு சென்ற சுகாதாரத்துறை செயலாளர், வீடு, வீடாக சென்று குடிநீர் சீராக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். மேலும், அரசு பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா? என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வறட்சியால் காய்ந்த தென்னை மரங்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை 60 சதவீதம் குறைந்துள்ளது. 70 சதவீத தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மாவட்ட கலெக்டர், குடிநீர் தொடர்பான புகார்களை பெற, கட்டுப்பாட்டு அறை அமைத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். பழுதான குடிநீர் குழாய்களை சீரமைக்கவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் இம்மாவட்டத்திற்கு ரூ.9.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், குடிநீர் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பிரபாகர், திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஹரிகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், பன்னீர்செல்வம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story