அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி


அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 26 Jun 2019 11:00 PM GMT (Updated: 26 Jun 2019 9:16 PM GMT)

காடையாம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்திடுவதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

காடையாம்பட்டி அடுத்த தீவட்டிப்பட்டி ஊராட்சி நைனாகாடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இதில் 40 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கனகா, பூங்கொடி, மணிமேகலை, சித்தையன், வெங்கடேசன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து 3 மாட்டு கொட்டகைகள் அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நைனாகாட்டில் இருந்து அணைமேட்டுக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை என்றும், தங்களுக்கு சாலை வசதி அமைத்து தரக்கோரியும் அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த கோரிக்கையின் பேரில், அந்த பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தி தர தாசில்தார் மகேஸ்வரி, வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

பெண்கள் தீக்குளிக்க முயற்சி

அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று அந்த பகுதிக்கு மாட்டு கொட்டகை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அதற்கு அங்கிருந்த கனகா உள்ளிட்ட பெண்கள் தங்கள் மாட்டு கொட்டகை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென மண்எண்ணெயை தங்கள் உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதன்பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்திய வருவாய்த்துறையினர் இது அரசுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கூட்டாத்தாழ்வார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், கனகா, பூங்கொடி, மணிமேகலை, சித்தையன், வெங்கடேசன் ஆகிய 5 பேரை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தீவட்டிப்பட்டி ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story