குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரிக்கை: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறிய கிராம மக்கள்


குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரிக்கை: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:45 AM IST (Updated: 27 Jun 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர், சாலை வசதி செய்துதரக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரை கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி, பால்காய்ச்சியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொழுந்துரை கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் குடங்கள், அடுப்புகள், பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நேற்று ஊரைவிட்டு புறப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கிராம மக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து பால்காய்ச்சி, சமையல் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமத்தினர் கூறியதாவது:–

கொழுந்துரை ஊராட்சி பகுதியில் வடக்கு குடியிருப்பு, தெற்கு குடியிருப்பு, கிழக்கு குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆயிரத்து 500 வீடுகளுக்கு மேல் உள்ளன. அந்த பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் பல ஆண்டுகளாக வரவில்லை. இதனால் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.15 கொடுத்தும், அன்றாட உபயோகத்திற்கு தண்ணீரை குடம் ஒன்றுக்கு ரூ.10 கொடுத்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அருகில் உள்ள இலந்தை குளம் கிராமத்திற்கு சென்று உப்புநீரை குடிநீராக்கும் திட்டத்தில் ரூ.5 கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்கி வருகிறோம். இந்த தண்ணீரும் நிலத்தடிநீர் வற்றிவிட்டதால் தர மறுக்கின்றனர். இதனால் அருகில் உள்ள திருவரங்கம் பகுதியில் சென்று காவிரி கூட்டுக்குடிநீர் பிடித்து வந்த நிலையில் அந்த பகுதியினரும் வரக்கூடாது என்று தெரிவித்துவிட்டனர். இதனால் நாங்கள் குடிநீருக்காக அலையாய் அலைந்து வருகிறோம். ஆழ்துளை கிணறு அமைத்து உப்புநீரை குடிநீராக்கும் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

தற்போது திடீரென்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றுவதாக ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் வழங்கப்படவில்லை. எங்கள் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் நிற்கின்றன. ஊருணிக்குள் மின்கம்பம் வைத்துள்ளதால் ஆபத்தான நிலை உள்ளது. கொழுந்துரை முதல் எஸ்.காரைக்குடி இடையிலான சாலையானது, மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றவில்லை.

எங்களின் ரே‌ஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு அனைத்தையும் ஒப்படைத்து விட்டு கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வாழ்க்கையை நடத்தி கொள்கிறோம். குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ வழியின்றி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து உடனடியாக தண்ணீர் வசதிசெய்து தருவதாகவும், அடிப்படை வசதிகளை படிப்படியாக நிறைவேற்றி தருவதாகவும் அதிகாரிகள் உறுதிஅளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் அங்கு சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story