தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சி.பி.ஐ. மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சி.பி.ஐ. மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சி.பி.ஐ. மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

மதுரை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குனர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்தது. பின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் 8–ந்தேதி, முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, அவற்றில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளன. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடந்த அன்று நிகழ்ந்த சம்பவங்கள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசத்தை வருகிற 30–ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (அதாவது 27–ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது.


Next Story