அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா? மதுரையில் தங்கதமிழ்செல்வன் பேட்டி
‘‘அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா?’’ என்பதற்கு மதுரையில் அளித்த பேட்டியில் தங்கதமிழ்செல்வன் பதில் அளித்தார்.
மதுரை,
அ.ம.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், கொள்கை பரப்பு செயலாளராகவும் இருக்கும் தங்கதமிழ்செல்வனுக்கும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தங்கதமிழ்செல்வன் நேற்று காலை சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
அ.ம.மு.க.வில் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். அதை தவறு என்று நான் கருதுகிறேன். செல்போனில் பேசுவதை பதிவு செய்வது ஒரு தலைவனுக்கு அழகில்லை. வாய்ஸ் ரெக்கார்டர், வீடியோ அனுப்புவது, தனிப்பட்ட சந்திப்பை வெளியே கூறுவது, போனில் பேசுவதை கூறுவது, ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்ததை வெளியே கூறியது கொஞ்சமும் சரியல்ல.
அ.ம.மு.க.வில் நிர்வாகம் சரியில்லை. தேர்தலில் ஏற்பட்டது மிகப்பெரிய தோல்வி. நாடாளுமன்ற தேர்தலில் தோற்றோம், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோற்றோம். நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வேலை பார்த்தோம். அதிலும் தோல்வி தான் வந்துள்ளது. அப்போது மக்கள் ரசிக்கவில்லை என்பதுதான் அர்த்தம்.
அ.ம.மு.க.வில் மனநிறைவோடு இணைந்து பணியாற்றுவது என்பது எனக்குத்தெரிந்து இனி கிடையாது. என்னுடைய நிலைப்பாடு அமைதியாக இருக்கிறேன், மன நிறைவோடு இருக்கிறேன்.
அ.தி.மு.க. உள்பட எந்த ஒரு இயக்கத்திலும் இணையும் வேலையில் நான் இல்லை. அவர்களிடம் நான் பேசவில்லை. அ.ம.மு.க.வினர்தான் ஊடகங்களில் தவறாக கூறி வருகின்றனர்.
அ.தி.மு.க. அழைக்கும் பட்சத்தில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்றால், அந்த முடிவை தற்போது எடுக்கவில்லை. என்னை பார்த்தால் பொட்டிப் பாம்பாய் தங்கதமிழ்செல்வன் அடங்கி விடுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார். அவர் எனக்கு சம்பளம் ஏதும் கொடுக்கிறாரா?
அவருடைய பண்பாடு மிக மோசமாக இருக்கிறது. மக்கள் என்ன நினைப்பார்கள். பொட்டி பாம்பாய் அடங்குவார் என்று கூறினால் எதற்காக நான் அடங்க வேண்டும். அடங்க வேண்டிய அவசியம் என்ன? இதை ஒரு தலைவன் பேசலாமா? எல்லா மக்களும் இதை ரசிக்க மாட்டார்கள். தலைமைக்கு இது நல்லதில்லை.
‘ஒன் மேன் ஆர்மி’யாக அ.ம.மு.க.வில் வேலை செய்வதினால்தான் பாதி பேர் தற்போது வெளியே வந்துள்ளனர். இன்னும் முழுசாக வெளியே வந்துவிடுவார்கள். டி.டி.வி.தினகரனை நம்பி வந்து பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பது எனக்குத்தான் தெரியும். அவர்கள் வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள்.
டி.டி.வி.தினகரனுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கவர்னரை சந்தித்ததிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல்வேறு கருத்து வேறுபாடுகளால் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு, தற்போது தேர்தலிலும் தோற்றுவிட்டோம். அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறினார். அதுவும் இல்லை என்பது தேர்தல் மூலம் தெரிந்துவிட்டது.
என்னை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறுகிறார். கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் அவசியமா? அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும், அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும், தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் நினைத்தால் அது முடியுமா?
இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.
முன்னதாக அவரிடம் நிருபர்கள் ‘‘அ.தி.மு.க.வில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருக்கிறாரா?’’ என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு தங்கதமிழ்செல்வன், ‘‘இது ஊடகங்களாக கூறுவது’’ என்று பதில் அளித்தார்.