துங்கபத்ரா அணையில் தூர்வார சாத்தியம் இல்லை குமாரசாமி பேட்டி


துங்கபத்ரா அணையில் தூர்வார சாத்தியம் இல்லை குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

துங்கபத்ரா அணையில் தூர்வார சாத்தியம் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ராய்ச்சூரில் கிராம தரிசனத்திற்கு புறப்படுவதற்கு முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீர்ப்பாசனங்கள்

கிராம தரிசன திட்டம் ஒரு கட்சிக்கு சேர்ந்தது அல்ல. இது கூட்டணி கட்சிகளுக்கு சேர்ந்தது. கூட்டணி அரசு, பா.ஜனதாவினர் சொல்வது போல் 2 மாவட்டத்திற்கு மட்டும் சேர்ந்தது அல்ல. ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் ஒரே பார்வையில் கூட்டணி அரசு பார்க்கிறது. மாநிலத்தின் மொத்த வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்படுகிறது. சிவமொக்கா மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவனகவுடா நாயக் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு போருக்கு போவது போல் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் தனது தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாதது ஏன்?. பா.ஜனதாவினரின் பெயரை பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

அரசு பின்வாங்காது

தேவதுர்காவில் நீர்ப்பாசன திட்டங்கள், தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்த போது அமல்படுத்தப்பட்டது. இப்போது குற்றச்சாட்டுகளை கூறும் சிவனகவுடா நாயக் எம்.எல்.ஏ., அப்போது பிறந்திருந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் அரசு பின்வாங்காது. வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. விவசாய கடன் தள்ளுபடியால் மற்ற திட்ட பணிகளுக்கு நிதி குறைக்கப்பட்டுவிட்டதாக சிலர் தகவல்களை பரப்புகிறார்கள். இது முற்றிலும் பொய்யானது.

நீர்ப்பாசன திட்டங்களுக்கு நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ராய்ச்சூர் பல்கலைக்கழகம் குறித்து அவசர சட்டத்திற்கு மந்திரிசபை அனுமதி வழங்கியது. அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அவர் சில விவரங்களை கேட்டுள்ளார். அந்த விவரங்களை கவர்னருக்கு வழங்குவோம்.

புதிய அணை கட்ட முடிவு

துங்கபத்ரா அணையில் 39 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தேக்கும் அளவுக்கு தூர் படிந்துள்ளது. இவ்வளவு தூர் வாருவது என்பது சாத்தியம் இல்லை என்று அறிக்கை வழங்கப்பட்டது. இதையடுத்து நவலி அருகே புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story