வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பீதரில் மழைக்கு 6 பேர் பலி வீடு இடிந்து பழ வியாபாரி குடும்பத்தோடு பலியான சோகம்


வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பீதரில் மழைக்கு 6 பேர் பலி வீடு இடிந்து பழ வியாபாரி குடும்பத்தோடு பலியான சோகம்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:23 AM IST (Updated: 27 Jun 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.

பெங்களூரு,

கடந்த சிலதினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக உப்பள்ளி, தார்வார், பீதர், பல்லாரி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் பீதர் மாவட்டத்தில் கனமழைக்கு 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா ஜில்லாஹள்ளி லே-அவுட் கிராமத்தை சேர்ந்தவர் நதீம் சேக்(வயது 44). இவரது மனைவி பரிதா பேகம்(35). இந்த தம்பதிக்கு ஆயிஷா பானு(15), மகதாபீவி(13) என்ற மகள்களும், பயாஜ் கான்(8) பர்கான் அலி(4) என்ற மகன்களும் இருந்தார்கள். நதீம் சேக் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு நதீம் சேக், அவரது மனைவி மற்றும் 4 பிள்ளைகளும் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார்கள்.

6 பேர் பலி

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நதீம் சேக், அவரது குடும்பத்தினர் 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் பசவகல்யாண் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 பேரையும் மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 பேரும் ஏற்கனவே பலியாகிவிட்டார்கள். இதையடுத்து, நதீம் சேக், அவரது மனைவி பரிதா பேகம், அவரது பிள்ளைகள் ஆயிஷா பானு, மகதாபீவி, பயாஜ் கான், பர்கான் அலி ஆகிய 6 பேரின் உடல்களையும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நதீம் சேக்கின் வீடு மண்ணால் கட்டப்பட்ட மிகவும் பழமையான வீடாகும். அத்துடன் கடந்த சில நாட்களாக பசவகல்யாண் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. நேற்று முன்தினமும் மழை பெய்திருந்தது. இதனால் மழையாலும், பழமையான வீடு என்பதாலும் நதீம் சேக் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேரும் உடல் நசுங்கி பலியானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பசவகல்யாண் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பசவகல்யாணில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story