கிராம தரிசனத்துக்கு சென்றபோது முதல்-மந்திரியின் பஸ் முன்பு மறியல் போராட்டக்காரர்களுக்கு குமாரசாமி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு


கிராம தரிசனத்துக்கு சென்றபோது முதல்-மந்திரியின் பஸ் முன்பு மறியல் போராட்டக்காரர்களுக்கு குமாரசாமி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:27 AM IST (Updated: 27 Jun 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

கிராம தரிசனத்திற்கு சென்றபோது, முதல்- மந்திரி பயணம் செய்த பஸ்சை வழிமறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசன திட்டத்தை கடந்த 21-ந் தேதி யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகாவில் உள்ள சன்டரகி கிராமத்தில் நடத்தினார். அன்று மக்களிடம் குறைகளை கேட்ட குமாரசாமி, அதே கிராமத்தில் தங்கினார். மறுநாள் கலபுரகி மாவட்டத்தில் நடைபெற இருந்த கிராம தரிசனம், மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2-வது கட்டமாக கிராம தரிசனம் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ராய்ச்சூர் மாவட்டத்தில் தொடங்கினார். இதற்காக குமாரசாமி நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ரெயில் மூலம் ராய்ச்சூருக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன் பிறகு அவர் ராய்ச்சூரில் இருந்து அரசு பஸ்சில், கரேகுட்டா கிராமத்திற்கு சென்றார்.

மக்கள் ஏற்கவில்லை

செல்லும் வழியில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்து பஸ்சை தடுத்து குமாரசாமியிடம் மனு கொடுத்தனர். அப்போது யர்மரஸ் அனல்மின் நிலைய ஊழியர்கள் முதல்-மந்திரியின் பஸ்சை தடுத்து, மறியல் செய்தனர். தங்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பஸ்சில் இருந்த குமாரசாமி, கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி வழி விடுமாறும் கேட்டார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த முதல்-மந்திரி குமாரசாமி, பஸ்சின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வழியை விடுங்கள். இல்லாவிட்டால் போலீசார் மூலம் தடியடி நடத்தி கலைக்க வேண்டிய நிலை வரும். நீங்கள் தேர்தலில் மோடிக்கு ஓட்டு போட்டீர்கள். இப்போது பிரச்சினையை தீர்க்குமாறு என்னிடம் வந்து கூறுகிறீர்கள். பிரச்சினையை தீர்க்க மட்டும் நான் வேண்டுமா?. பிரதமர் மோடியின் வாகனத்தை இவ்வாறு தடுத்து போராட முடியுமா?. பாதுகாப்பு படையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவார்கள். உங்களின் பிரச்சினையை சொல்கிறீர்கள், மரியாதை கொடுக்கிறீர்களா?. இவ்வாறு நடந்து கொள்ளும் உங்களின் பிரச்சினைகளை நான் தீர்க்க வேண்டுமா?“ என்றார். சுமார் 20 நிமிடங்கள் முதல்-மந்திரியின் பஸ் அங்கேயே நின்றது. அதன் பிறகு அந்த ஊழியர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பிறகு பஸ் புறப்பட்டு சென்றது. குமாரசாமி பயணித்த பஸ்சை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எடியூரப்பா கண்டனம்

குமாரசாமியின் இந்த பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருக்கும் குமாரசாமி, சொந்த மாநில மக்களையே இவ்வாறு கடுமையாக மிரட்டுவதை ஏற்க முடியாது. குமாரசாமி தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்வதால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினர்” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, “முதல்-மந்திரி குமாரசாமியின் கிராம தரிசனத்திற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாத சில சக்திகள், கிராம தரிசனத்திற்கு திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். கிராம தரிசனத்திற்கு எடியூரப்பா தான் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்றார்.

வாபஸ் பெற மாட்டேன்

பா.ஜனதா கண்டனம் தெரிவித்து இருப்பது குறித்து கருத்து கூறிய முதல்-மந்திரி குமாரசாமி, “நான் சென்ற பஸ்சை வழிமறித்து சிலர் போராட்டம் நடத்தினர். அதனால் 15 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். அதனால் விலகி செல்லுமாறு கூறினேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. பிரதமர் பயணம் செய்திருந்து, இவ்வாறு தடுத்திருந்தால் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா?. இந்த கூட்டணி அரசு, பொறுமையுடன் நடந்து கொள்கிறது. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் எனது கருத்தை வாபஸ் பெற மாட்டேன். மன்னிப்பும் கேட்க மாட்டேன்” என்றார்.

Next Story