குடும்ப தகராறில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை


குடும்ப தகராறில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விவசாயி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த மேல் அரசம்பட்டு கோமுட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 48). விவசாயி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், மோகன்ராஜ், பாலாஜி என்ற 2 மகன்களும், லோகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் லோகேஷ்வரிக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் 2 பேரும் பெங்களூருவில் வேலை செய்து வருகின்றனர்.

மனைவி சித்ராவுடன் ஜெய்சங்கர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு நடந்துள்ளது. இதில் மனமுடைந்த ஜெய்சங்கர் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வயலுக்கு சென்றார்.

அங்கு அவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை தனது கழுத்தில் வைத்து சுட்டுக்கொண்டார். இதில் குண்டு பாய்ந்ததில் ஜெய்சங்கர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

இதனிடையே இரவு வெளியில் சென்ற கணவர் ஜெய்சங்கர் வீட்டுக்கு வராததால் சித்ரா அவரை தேடினார். வயலுக்கு சென்று பார்த்தபோது மாமரத்தின் கீழ் கணவர் குண்டு பாய்ந்து இறந்து கிடந்ததை கண்டு கதறினார். அருகில் நாட்டுத் துப்பாக்கியும் கிடந்தது.

தகவல் கிடைத்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெய்சங்கரின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலைக்கு பயன் படுத்திய நாட்டு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story