போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி, கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடைகளை பூட்டி ஆர்ப்பாட்டம்


போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி, கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடைகளை பூட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடைகளை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பார் வாடகைக்கு எடுத்து நடத்தி வருபவர் அருணாசலம். இவர், கடந்த 20-ந் தேதி டாஸ்மாக் ஊழியர்களிடம் மதுபானம் கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் கணேஷ் மற்றும் மகேந்திரன் ஆகியோர் மதுபானம் தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் டாஸ்மாக் ஊழியர்கள் கணேஷ், மகேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை மாவட்ட எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., பாட்டாளி தொழிற்சங்கம், விற்பனையாளர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கூடினார்கள்.

முன்னதாக அவர்கள் கோவை மாநகரில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி விட்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பொய் வழக்கு போட்டதை டாஸ்மாக் நிர்வாகம் தட்டிக்கேட்காமல் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு ஊழியர்கள் பணிக்கு திரும்பி டாஸ்மாக் கடைகளை திறந்தனர்.

இது குறித்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியவரை கைது செய்ய வேண்டும். அவருடைய பார் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் மீதும் டாஸ்மாக் நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கூடாது என்ற எங்களின் கோரிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

எதிர்காலத்தில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியாமல் ஊழியர்களை போலீசார் கைது செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. எங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் ஒரு மணிக்கு கடையை திறந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story