மண்ணிவாக்கத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை; 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


மண்ணிவாக்கத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை; 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jun 2019 11:30 PM GMT (Updated: 26 Jun 2019 10:58 PM GMT)

மண்ணிவாக்கத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ராஜா என்கிற ஆட்டோ ராஜா (வயது 36), ஆட்டோ டிரைவர். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள சாலையில் ராஜா நடந்து செல்லும்போது திடீரென 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வீச்சரிவாளால் வெட்ட தொடங்கினர். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடிய ராஜா அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தார். ஆனால் விடாது துரத்தி சென்ற அந்த கும்பல் தஞ்சம் அடைந்த வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அவரை வீச்சரிவாளால் வெட்டியது.

அண்ணனை வெட்டுவதை பார்த்து தம்பி கோட்டி தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ ராஜாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோ டிரைவரின் தம்பி கோட்டியை முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை வெட்டி படுகொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இதனையடுத்து கொலை நடந்த மண்ணிவாக்கம் அம்பேத்கர் தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:–

மண்ணிவாக்கத்தில் ஆட்டோ டிரைவர் ராஜாவை வெட்டி படுகொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் ராஜாவுக்கும், மீன் வியாபாரி பிரபாகரனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்ததால் இந்த கொலை நடந்து உள்ளது. ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story