உடன்குடி அருகே, மூதாட்டி கொலையில் துணி வியாபாரி உள்பட 2 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
உடன்குடி அருகே மூதாட்டி கொலையில் துணி வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்ததற்கான காரணம் குறித்து துணி வியாபாரி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
குலசேகரன்பட்டினம்,
உடன்குடி-குலசேகரன்பட்டினம் மெயின் ரோடு ஜோதி நகர் காட்டு பகுதியில் கடந்த 14-ந்தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், நெல்லையை அடுத்த சுத்தமல்லி பாரதி நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி காளியம்மாள் (வயது 60) என்பது தெரிய வந்தது. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னுசாமி இறந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற காளியம்மாள் மாயமானார்.
குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணையில், ஜோதிநகர் காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தது அவர் தான் என்றும், அவரை யாரோ கடத்தி சென்று கொலை செய்ததும் தெரிய வந்தது. எனவே அவரை கடத்தி சென்று கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், காளியம்மாளை கொலை செய்தது, நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த துணி வியாபாரி கதிர்வேல் (48), சென்னை பேரூரைச் சேர்ந்த குமார் மகன் வினோத் (26) என்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான கதிர்வேல் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் தள்ளுவண்டியில் ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கும், காளியம்மாளுக்கும் பழக்கம் இருந் தது. இந்த நிலையில் நான் மொத்தமாக துணி வாங்குவதற்கு சென்னைக்கு சென்றபோது, தச்சு தொழிலாளியான வினோத்திடம் நட்பு ஏற்பட்டது. எங்கள் 2 பேருக்கும் தொழிலில் போதிய லாபம் இல்லாததால், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டோம். இதற்காக வினோத் சென்னையில் இருந்து காரில் நெல்லைக்கு வந்தார்.
அப்போது நெல்லையில் நடந்து சென்ற காளியம்மாளிடம், குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்வதாக கூறி, அவரை காரில் அழைத்து சென்றோம். பின்னர் உடன்குடி அருகே ஜோதிநகர் காட்டு பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காளியம்மாள் காரில் இருந்து இறங்கி னார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்து, நகையை பறித்தோம். மேலும் அவருடைய மணிபர்ஸ், செல்போன் ஆகியவற்றையும் எடுத்து கொண்டு காரில் தப்பி சென்றோம். பின்னர் மணிபர்ஸ், செல்போனை திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் வீசிச் சென்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காளியம்மாளிடம் பறித்த 2 பவுன் நகையையும் மீட்டனர். கதிர்வேல், வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story