காவிரி கூட்டுக்குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்


காவிரி கூட்டுக்குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:30 PM GMT (Updated: 27 Jun 2019 7:44 PM GMT)

காவிரி கூட்டுக்குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டி அம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு போதுமான அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்ட நிலையில் 35 கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் செல்லாத கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளை கண்டறிந்து அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் ஆத்தூர் எம்.எல்.ஏ. இ.பெரியசாமி பேசுகையில், பொன்மாந்துரை, மாங்கரை, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 இடங்களில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. வேடசந்தூரில் 40 டி.எம்.சி தண்ணீர் வீணாக செல்கிறது. அந்த தண்ணீரை ஆத்தூர் தொகுதியில் உள்ள பகுதிகளுக்கு வினியோகம் செய்யவேண்டும். ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டு வரும் வழியில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. புதிய குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் அந்த கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றார்.

பின்னர் பேசிய அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதனை தீர்க்க போர்கால அடிப்படையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்றார்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் மூலமாக குடிநீர் வழங்க மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 17-ந்தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் மாவட்ட கலெக்டரிடம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மனு கொடுத்தோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கூட்டத்தில் ஆய்வு நடத்தினோம். அடுத்தமாதம் கடைசிக்குள் போர்கால அடிப்படையில் மின் இணைப்பு, தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு கலெக்டரும், அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்த உடன் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story