ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு, 15 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை இணைக்க விவசாயிகள் எதிர்ப்பு
15 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இணைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திண்டுக்கல்,
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் ரவிச்சந்திரன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி பேசியதாவது:-
விவசாயிகள் அனைவரையும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயத்தில் இயற்கை வேளாண் யுக்திகளை கையாள அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்தால் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தேவையில்லை.
வருவாய்த்துறை அலுவலகத்துக்கு பட்டா மாறுதல் செய்ய சென்றால் பணம் வாங்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. பழனி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை ஆனைமலை புலிகள் காப்பகத்தோடு இணைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகளுக்கு எந்த விதமான தகவலும் தெரிவிக்கவில்லை. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். புலிகள் காப்பகத்தோடு விவசாய நிலங்களை இணைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்.
பழனி பகுதிகளில் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் அங்கிருக்கும் மின்மோட்டார் கள் உள்பட விவசாய உப கரணங்களையும் சேதப்படுத்தி செல்கிறது. இதற்கு வனத்துறையினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பழனி பகுதிகளில் புலிகள் கிடையாது. இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அவர் பேசுகையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நான் பலமுறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story