பணப்பலன்கள் வழங்காததை கண்டித்து, தனியார் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பணப்பலன்கள் வழங்காததை கண்டித்து தேவர்சோலையில் தனியார் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே தேவர்சோலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பணப்பலன்களை சரிவர தோட்ட நிர்வாகம் வழங்குவது இல்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஐ.என்.டி.யு.சி, பி.எல்.ஓ. தொழிற்சங்கங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட தோட்ட அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. தலைவர் கே.பி.முகமது தலைமை தாங்கினார். பி.எல்.ஓ. தலைவர் சையது முகமது, நிர்வாகிகள் சந்திரன், பழனி, ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். பின்னர் தோட்ட நிர்வாகத்திடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம்(ஜூலை) 6, 7-ந் தேதிகளில் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தேவர்சோலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தோட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தோட்ட தொழிலாளர்கள் அறிவித்தனர். பின்னர் மாலையில் கலைந்து சென்றனர். இதுகுறித்து ஐ.என்.டி.யூ.சி. தலைவர் கே.பி.முகமது கூறியதாவது:-
தனியார் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் சம்பளத்தில் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்கிறது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தொழிலாளர்களின் பெயரில் செலுத்துவது இல்லை. இதுதவிர பணப்பலன்களும் வழங்குவது இல்லை. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் தோட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் அடுத்த மாதம் 6, 7-ந் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்த தோட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் 8-ந் தேதி போராட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story