பீதரில் மழையால் வீடு இடிந்து விழுந்து பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு ரூ.24 லட்சம் நிதி உதவி முதல்-மந்திரி குமாரசாமி நேரில் வழங்கினார்
பீதர் மாவட்டத்தில் மழையால் வீடு இடிந்துவிழுந்து மரணம் அடைந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி குமாரசாமி ரூ.24 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கிராமங்களை வளர்ச்சி அடைய வைக்கும் நோக்கில் கிராம தரிசன திட்டத்தை தொடங்கியுள்ளார். கடந்த 21-ந்தேதி யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகா சன்டரகி கிராமத்தில் அவர் கிராம தரிசன திட்டத்தை தொடங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைதொடர்ந்து ராய்ச்சூர் மாவட்டம் கரேகுட்டா கிராமத்தில் நேற்று முன்தினம் குமாரசாமி பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். இதற்கிடையே பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகாவில் உள்ள ஜில்லாஹள்ளி லே-அவுட் கிராமத்தை சேர்ந்த நதீம் சேக் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பேர், நேற்று முன்தினம் மழையால் வீடு இடிந்துவிழுந்து மரணம் அடைந்தனர். இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி, கிராம தரிசன நிகழ்ச்சிக்காக நேற்று பீதருக்கு வந்தார்.
கிராம தரிசனத்திற்கு செல்வதற்கு முன்பு, அவர் மழையால் மரணம் அடைந்தவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் ரூ.24 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையையும் முதல்-மந்திரி வழங்கினார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பழைய கட்டிடங்கள்
பீதர் மாவட்டத்தில் 100 ஆண்டுகளான பழைய குடியிருப்பு கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பசவகல்யாண் தாலுகாவில் 2 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
அப்போது மந்திரிகள் பண்டப்பா காசம்பூர், ரகீம்கான் மற்றும் ஈஸ்வர் கன்ட்ரே எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story