கல்வி, வேலைவாய்ப்புக்காக அரசு கொண்டு வந்த மராத்தா இடஒதுக்கீடு செல்லும் மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


கல்வி, வேலைவாய்ப்புக்காக அரசு கொண்டு வந்த மராத்தா இடஒதுக்கீடு செல்லும் மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லுபடியாகும் என்று மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

மும்பை,

மராட்டியத்தில் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 13 கோடி. இவர்களில் மராத்தா சமுதாயத்தினர் 33 சதவீதம் உள்ளனர்.

இடஒதுக்கீடு கோரிக்கை

இந்த சமுதாயத்தினர் அரசியலில் கொடி கட்டி பறக்கின்றனர். குறிப்பாக மராட்டிய மாநிலம் 1960-ம் ஆண்டு உருவான பிறகு இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்து உள்ளனர்.

அவர்களில் மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரி ஒய்.பி. சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மறைந்த காங்கிரஸ் தலைவர் விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால் பொருளாதாரத்தில் தங்களது சமூகம் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும், இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மராத்தா சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

போராட்டம்

இதனையடுத்து, கடந்த முறை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, பிரிதிவிராஜ் சவான் தலைமையிலான அரசு மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு அளித்து அவசர சட்டம் பிறப்பித்தது. ஆனால் இந்த அவசர சட்டத்துக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அகமத் நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தில் மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 14 வயது சிறுமி மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த வாலிபர்களால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டாள்.

இந்த பிரச்சினையில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தங்களது சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 50 அமைதி பேரணிகளை பிரமாண்டமாக நடத்தி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

வன்முறை

ஆனால் மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அவர்களது போராட்டங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. பொதுச்சொத்துகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே மராத்தா சமுதாயத்தினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அரசு கேட்டுக்கொண்டது.

இந்த ஆணையம் தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.

அந்த ஆய்வு அறிக்கையில், மராத்தா சமுதாய மக்கள் தொகையில் 37.28 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், 93 சதவீத குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த ஆய்வு அறிக்கை மூலம் அந்த சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க சாதகமான சூழல் உருவானது.

சட்டம்

இதையடுத்து மராத்தா இடஒதுக்கீடு மசோதா கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி சட்டசபையில் நிறைவேறியது. அன்றைய தினமே இந்த மசோதாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கையெழுத்திட்டு, அதை சட்டமாக்கினார்.

மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்ததன் மூலம் மராட்டியத்தில் பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்படும் மொத்த இடஒதுக்கீடு வரம்பு 68 சதவீதமாக உயர்ந்தது. அதிகப்பட்சமாக தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில், இதில் மராட்டியம் 2-வது இடத்தை பிடித்தது.

அடுத்ததாக அரியானாவில் 67 சதவீத இடஒதுக்கீடும், தெலுங்கானாவில் 62 சதவீத இடஒதுக்கீடும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐகோர்ட்டில் எதிர்ப்பு

இதற்கிடையே மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ரஞ்சித் மோரே, பாரதி தாங்ரே ஆகியோர் விசாரித்து வந்தனர். அப்போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்தை மீறக்கூடாது என்று மனுதாரர்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டது.

ஆனால் மராத்தா சமுதாயத்தினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால், அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இடஒதுக்கீடு செல்லும்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினர். அப்போது, மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டனர்.

ஆனால் இடஒதுக்கீடு சதவீதத்தை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கல்வியில் 12 சதவீதமும், வேலைவாய்ப்பில் 13 சதவீதமும் மட்டும் வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள், அதற்கு ஏற்ப நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சதவீதத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

மகிழ்ச்சி கொண்டாட்டம்

அரசியல் சாசனப்படி இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியதை மராத்தா சமுதாயத்தினர் வரவேற்றனர். ஐகோர்ட்டின் வெளியே நின்ற மராத்தா போராட்டக்குழுவினர் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் இடஒதுக்கீட்டு சதவீதத்தை குறைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டதை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு நிவர்த்தி பெறுவோம் என்று மராத்தா போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தீர்ப்பை வரவேற்றார்.

இதற்கிடையே இடஒதுக்கீடு தீர்ப்பை கொண்டாடும் வேளையில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் உஷாராக இருக்குமாறு போலீசாருக்கு மாநில டி.ஜி.பி. அலுவலகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story