விலையில்லா மடிக்கணினி கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மாணவ-மாணவிகள் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


விலையில்லா மடிக்கணினி கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மாணவ-மாணவிகள் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:30 PM GMT (Updated: 28 Jun 2019 12:06 AM GMT)

விலையில்லா மடிக்கணினி கேட்டு மாணவ-மாணவிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-2018-ம் ஆண்டில் படித்து முடித்த முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அந்த கல்வி ஆண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர்.

கடந்த 24-ந் தேதி அவர்கள் விலையில்லா மடிக்கணினிகளை கேட்டு போராட்டத்தில் இறங்கினார்கள். வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தபோது முன்னாள் மாணவ-மாணவிகள், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோரை முற்றுகையிட்டனர்.

மேலும், 2 மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் விலையில்லா மடிக்கணினிகள் கேட்டு மாணவ-மாணவிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்போவதாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அனைவரையும் விசாரணை நடத்தி உள்ளே அனுப்பினர்.

அப்போது மாணவ-மாணவிகளும் அங்கு வரத்தொடங்கினார்கள். அவர்களை நுழைவு வாயில் பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பகல் 11 மணிஅளவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சில மாணவ-மாணவிகளை மட்டும் மனு கொடுக்க போலீசார் உள்ளே அனுமதித்தனர். மற்ற மாணவ-மாணவிகளை நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி வைத்து, அவர்களுடைய விவரங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

மனு கொடுப்பதற்காக உள்ளே சென்ற மாணவ-மாணவிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். 2017-2018-ம் ஆண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அரசு உத்தரவையும் அதிகாரிகள் காண்பித்து விளக்கம் அளித்தனர். மேலும், அரசு உத்தரவு நகலும் மாணவ-மாணவிகளிடம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் வெளியில் வந்த அவர்கள் சக மாணவ-மாணவிகளிடம் அதிகாரிகள் கூறிய விளக்கத்தை எடுத்து கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

நாங்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க மட்டுமே வந்திருக்கிறோம். ஆனால் எதற்காக இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரியவில்லை. இதற்கு பயந்து ஒருசிலர் திரும்பி சென்றுவிட்டனர். 2 மாதங்களில் எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர். அதுவரை எங்களை காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் நாங்களும் 2 மாதங்கள் வரை காத்திருப்போம். அதன்பிறகும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்குவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாணவ-மாணவிகள் திரண்டு வரும் தகவல் அறிந்து, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story