கடம்பூர் அருகே குன்றியில், வனக்குட்டையில் குட்டிகளுடன் குளித்து யானைகள் கும்மாளம்
கடம்பூர் அருகே குன்றியில் உள்ள வனக்குட்டையில் குட்டிகளுடன் யானைகள் குளித்து கும்மாளமிட்டன.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, ஜீர்கள்ளி, டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர் உள்ளிட்ட வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. போதுமான மழை இல்லாததால் ஒருசில வனச்சரகங்களில் செடி-கொடிகள் கருகியதோடு, வனக்குட்டைகளில் தண்ணீர் இல்லை.
இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இந்தநிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மற்றும் குன்றி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் கடம்பூர் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. நேற்று 4 குட்டிகளுடன் 9-க்கும் மேற்பட்ட யானைகள் கடம்பூர் அருகே குன்றி வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைக்கு வந்து தண்ணீர் குடித்தன.
பின்னர் அந்த குட்டையில் குளித்து கும்மாளமிட்டன. யானைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி குட்டிகளின் மீது பீய்ச்சி விளையாடின. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் தண்ணீர் குடித்துச்செல்கிறது. அதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், சாலையோரங்கள் மற்றும் வனக்குட்டைகளில் யானை நிற்பதை கண்டால் வாகனங்களை நிறுத்திவிட்டு, யானையின் அருகே செல்லக்கூடாது. குறிப்பாக செல்போனில் யானைகளை படம் பிடிக்காதீர்கள். அதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story