நல்லூர் அருகே, மண் ஆய்வு செய்ய வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்


நல்லூர் அருகே, மண் ஆய்வு செய்ய வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

நல்லூர் அருகே மண் ஆய்வு செய்ய வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லூர்,

நல்லூர் அருகே விஜயாபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குடிநீர் பற்றாக்குறையை போக்க மாநகராட்சி சார்பில் மேல்நிலை தொட்டி கட்டுவதற்காக விஜயாபுரம், தெற்கு வீதி, பாறை வளைவு அருகே மண் ஆய்வு முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் போர்வெல் என்ஜின் கொண்ட மண் ஆய்வு எந்திரத்தை வாகனத்தில் கொண்டு வந்து பணிகளை தொடங்கினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

விஜயாபுரம், தெற்கு வீதி அருகே ரோடு மட்டத்திற்கு பாறைகள் நிறைந்த பகுதிகளாகும். அந்த பாறைகள் மீது தான் சிலர் வீடுகள் கட்டி உள்ளனர். இப்பகுதியில் தொட்டிக்கட்ட பாறைகளுக்கு வெடி வைத்து குழி தோண்டப்படும். அப்படி வெடிவைத்து பாறைகள் அகற்றும் போது அதன் அருகில் பாறையின் மேல் குடியிருந்து வரும் வீடுகளின் சுவர்கள் விரிசல் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும் தெற்கு வீதி, பாறை வளைவு அருகே தொட்டி அமைத்தல் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதை தடை படும். எனவே மேல் நிலை தொட்டியை மாற்று இடத்தில் அமைத்து எங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மனு அளித்திருந்தோம். இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் மேல்நிலை தொட்டி கட்ட மண் ஆய்வு செய்ய வந்துள்ளனர். எனவே மாற்று இடம் தேர்வு செய்து தொட்டி கட்டி முறையான குடிநீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அதிகாரிகளிடம் செல்போன் மூலம் பிரச்சினை குறித்து விபரம் தெரிவித்தனர். அதன் பின் மண் ஆய்வு செய்யாமல் அங்கிருந்து வாகனத்தை ஓட்டி சென்றனர். 

Next Story