மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முதன் முறையாக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு மிக பயனுள்ள ஒன்றாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு மடிக்கணினி என்றால் அது பணக்கார பிள்ளைகளிடம் மட்டும்தான் இருக்கும். இந்த மடிக் கணினி ஏழை குழந்தைகளுக்கு கனவு திட்டமாக இருந்தது.

இதைக்கண்ட மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை குழந்தைகள் முழுமையான கல்வியை பெற்றால்தான் பொருளாதாரம் சிறந்து விளங்கும் என்பதை உணர்ந்து இத்திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பின்னர் தான் இன்று ஒவ்வொரு ஏழை குழந்தைகளிடம் இந்தமடிக்கணினி தவழ்ந்து வருகிறது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் அவர்கள்விரும்பிய பாடங்களை வீட்டில் இருந்த படியே படிக்க முடிகிறது. இந்த மடிக்கணினி பெறும் மாணவ-மாணவிகள் பெற்ற மாணவர்கள் வருங்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி இந்த மாவட்டத்திற்கு பெருமை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 17ஆயிரத்து 646 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. விழாவில் மானா மதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, பரமதயாளன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அனிதாநாயக் மற்றும் ராதிகா உள்பட 17 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Next Story