மானிய டீசல் வழங்கக்கோரி பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம்


மானிய டீசல் வழங்கக்கோரி பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

மானிய டீசல் வழங்கக்கோரி பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் சுமார் 10 படகுகள் ஸ்டீல் படகுகளாகும். இந்த படகுகளுக்கு மானிய டீசல் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி மீன்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து இந்த ஸ்டீல் படகுகளுக்கு மானிய டீசல் உடனடியாக வழங்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் விசைப்படகுகள் அனைத்தும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு சென்று வருகின்றன. இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- பாம்பனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.

தற்போது இந்த பகுதியில் 10-க்கும் அதிகமாக ஸ்டீல் படகுகள் உள்ளன. இந்த படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கக்கோரி மீன்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மீன்துறை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதா? அல்லது வேலை நிறுத்தத்தை தொடருவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story