ஏற்காட்டில் நாமக்கல் தம்பதி தற்கொலை முயற்சி கடன் தொல்லையால் விபரீதம்
நாமக்கல் தம்பதி தங்களின் மகள்கள் திருமண செலவுக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் ஏற்காட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
ஏற்காடு,
நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வசித்து வருபவர் பாலசண்முகம் (வயது 54), டெய்லர். இவருடைய மனைவி சுசீலா(47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் இரு மகள்களின் திருமண செலவுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் இந்த தம்பதி மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டனர். இனி கடன் தொல்லை நெருக்கடியில் உயிர் வாழ முடியாது என்று ஒரு கட்டத்தில் முடிவு எடுத்த இந்த தம்பதி நேற்று முன்தினம் இரவு நாமக்கல்லில் பூச்சி மருந்து வாங்கினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சேலத்துக்கு பஸ்சில் நள்ளிரவில் வந்தனர். அதிகாலை வரை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்த இந்த தம்பதியினர் அங்கிருந்து ஏற்காட்டுக்கு வரும் முதல் பஸ்சில் ஏறி வந்தனர்.
ஏற்காட்டில் படகு இல்லம் பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலை இறங்கிய அந்த தம்பதி, அங்கிருந்து 19–வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு நடந்து வந்தனர். பின்னர் அங்கு பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இனிமேல் கடன் தொல்லையால் இந்த உலகில் வாழ முடியாது என்று மனவேதனையில் தேம்பி அழுத அவர்கள் இருவரும் தாங்கள் கையில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து விட்டனர். இதில் அவர்கள் மயங்கி அங்கேயே கிடந்தனர்.
இதனிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், உயிருக்கு போராடிய அந்த தம்பதியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த தம்பதியை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பாலசண்முகத்தின் சட்டை பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில் தனது மகள்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு தம்பி சீனிவாசனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் தொல்லையால் நாமக்கல் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.