லால்பாக் மாதிரி பூங்கா அமைக்கப்படும் பெங்களூருவில் 4 இடங்களில் உயர் பல்நோக்கு மருத்துவமனை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி


லால்பாக் மாதிரி பூங்கா அமைக்கப்படும்  பெங்களூருவில் 4 இடங்களில் உயர்  பல்நோக்கு மருத்துவமனை  துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 9:36 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 4 இடங்களில் உயர் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், லால்பாக் மாதிரி பூங்கா அமைக்கப்படும் என்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு தின்னூர் மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அந்த ரோடு குறுகலாக இருப்பதால் தான் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும், சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தின்னூர் சாலை விரிவாக்கப் பணிகளை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தின்னூர் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை 80 அடி சாலையாக அகலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இங்குள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் 40 அடி சாலை அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் 10 அடி மட்டும் அகலப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த சாலையை அகலப்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தின்னூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

அந்த ஆக்கிரமிப்பை அகற்ற அடுக்குமாடியில் குடியிருப்போர் ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். அந்த தடை ஆணையை நீக்க தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். பெங்களூருவில் 4 இடங்களில் உயர் பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும். லால்பாக், கப்பன் பூங்கா மாதிரியில் பிற பகுதிகளில் பூங்காக்கள் நிறுவப்படும். கன்டீரவா மைதானத்தை போல் பிற இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

இந்த திட்டங்களுக்கு தேவையான நிதி வருகிற பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். இவற்றுக்கான இடத்தை அடையாளம் காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மேயர் கங்காம்பிகே, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story