‘இப்படியும் திருடுவாங்க போல..’ காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு


‘இப்படியும் திருடுவாங்க போல..’ காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 5:00 AM IST (Updated: 28 Jun 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் நகையை பறித்தவர் சிக்கினார்.

நல்லூர்,

பொதுவாக பஸ், ரெயில்களில் செல்லும் போதும், தியேட்டர்களில் படம் பார்க்க செல்லும் போதும் அருகே இருப்பவர்கள் பிஸ்கட், காபி ஏதேனும் கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடாதீர்கள் என்று எச்சரிப்பது உண்டு. ரெயில்களில் செல்லும் போது நெருங்கிய உறவினர்கள் போல பழகி மயக்க பிஸ்கட் கொடுத்து பொருட்களை அபேஸ் செய்து விடுவார்கள். ஆதலால் முன்பின் தெரியாத யாரேனும் ரெயிலில் பயணம் செய்யும் போது ஏதாவது உணவு பொருட்களை கொடுத்தால் வாங்கி சாப்பிடாதீர்கள் என்று ரெயில் நிலையங்களில் அடிக்கடி ஒலிபெருக்கியில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்வார்கள். ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி பல பயணிகள் ஏமாந்து தங்கள் பொருட்களை இழந்தது உண்டு.

அது போல் திருப்பூரில் ஒரே காம்பவுண்டில் வசிக்கும் வீட்டில் நன்கு தெரிந்த நபரே காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏமாற்றி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்து உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் ராக்கியாப்பாளையம் பிரிவு, மணியகாரம்பாளையம் ரோடு, வள்ளியம்மை நகர், முதல் வீதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவருடைய மனைவி மல்லிகா (வயது 55). இவர் தரைத்தளத்தில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் அதே காம்பவுண்டில் முதல் மாடியில் வசித்து வருபவர் தர்மராஜ். இவருடைய மனைவி கார்த்திகா (42). ஒரே காம்பவுண்டில் வசித்து வந்ததால் இரு குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

சம்பவத்தன்று தரைத்தள வீட்டில் வசிக்கும் மல்லிகா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டு வேலைகளை கவனித்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த கார்த்திகா, மல்லிகாவுடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார். பிறகு கார்த்திகா, ‘‘வீட்டு வேலை பார்த்து சோர்வாக இருக்கிறீங்க. கொஞ்சம் காபி கொண்டு வரேன் அக்காள்’’ என்று கூறி விட்டு முதல்மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு காபி போட்டு விட்டு மல்லிகா வீட்டுக்கு வந்து அவருடன் சேர்ந்து காபி குடித்து உள்ளார்.

காபி குடித்த சிறிது நேரத்தில் மல்லிகாவுக்கு லேசான மயக்கம் வந்து உள்ளது. உடனே அவர் எனக்கு தலைச்சுற்றல் போல இருக்கிறது என்று கூறி விட்டு தனது வீட்டு படுக்கை அறைக்கு சென்று அவர் படுத்து கொண்டார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த போது மல்லிகா தனது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலிச்சங்கிலியை காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டார். வீட்டில் எங்காவது விழுந்து இருக்குமோ? என தேடி பார்த்தார். காணவில்லை. தான் படுக்கையில் தூங்கிய போது யாரோ மர்ம ஆசாமி வீடு புகுந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகித்தார்.

இது குறித்து திருப்பூர் ஊரக போலீசில் அவர் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நகை காணாமல் போவதற்கு முன்பு தான் மேல்வீட்டு கார்த்திகா கொண்டு வந்த காபியை குடித்ததாக அவர் தெரிவித்தார். அந்த காபி குடித்த சிறிது நேரத்திலேயே தலைசுற்றல் வந்து தான் மயங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மேல்வீட்டு கார்த்திகாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மல்லிகா அணிந்து இருந்த 7½ பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திகாவை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அக்கம், பக்கத்தினர் என்றாலே மிகவும் நெருங்கி பழகுவார்கள். ஆனால் இப்படி மிகவும் நெருக்கமாக பழகி விட்டு ஒரு காபி கொடுத்து 7½ பவுன் நகையை பறித்து விட்டாரே. இப்படியும் திருடுவாங்க போல.. என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கலாயித்தனர்.

Next Story