கரூரில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
கரூரில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி மற்றும் நகராட்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம், கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலாளருமான விஜயராஜ்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தி்ல் கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு செய்யப்படும் குடிநீர் வினியோகம் குறித்தும், குடிநீர் பற்றாக்குறையை போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிப்பு அதிகாரி கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அப்போது குடிநீர் வினியோகம் தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்தில் தற்போது வரை 1,152 குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதில் 1,124 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள 28 பணிகள் வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்கப்படும். குடிநீர் பணிகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து அன்றைய தினமே குடிநீர் வினியோகிக்கவும் ஏற்பாடு நடக்கிறது. ஊராட்சிப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் வற்றிய நிலையிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 93 குக்கிராமங்களுக்கும் 50 லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக 347 கிராமங்களுக்கு 53 லாரிகள் மூலம் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, உதவி இயக்குனர்கள் உமாசங்கர்(ஊராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் சீனிவாசன்(நகர்புறம்), சுதாமகேஷ் (ஊரகம்), உதவிப்பொறியாளர் யோகராஜ், நகராட்சி பொறுப்பு ஆணையர்கள் ராஜேந்திரன்(கரூர்), கார்த்திகேயன்(குளித்தலை),் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மறவாப்பாளையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இயக்கப்படும் தலைமை நீரேற்று நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி, அங்கு காவிரி ஆற்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு 1 கோடியே 17 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு கரூர், பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குடியிருப்புகளுக்கும், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சிகளுக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குப்பம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியையும், ரூ.8½ லட்சம் மதிப்பில் 6,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுகின்றதா? என மக்களிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story