கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய பூண்டி ஏரி
பூண்டி ஏரி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
செங்குன்றம்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். சென்னை நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு செய்துகொண்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து வந்து சேரும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
பருவமழை பொய்த்து போனது, கோடை வெயில் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காத காரணங்களால் பூண்டி ஏரி முழவதுமாக வறண்டது. இதனால் சென்னையில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டதால் விவசாயிகள் கால்நடைகளை ஏரியில் மேய்க்க விட்டுள்ளனர். இதனால் பூண்டி ஏரி தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
பூண்டி ஏரியில் தண்ணீர் இருக்கும்போது ஏரியை பார்வையிட ஏராளமானோர் குவிவார்கள். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பூணடிக்கு வருவது உண்டு. இதனால் ஏரிப்பகுதி எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஏரி வறண்டு விட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. ஏரி வறண்டு விட்டதால் மீனவர்கள் வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மறுபுறம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூண்டி ஏரி முழவதுமாக நிரம்பினால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படும். ஏரி வறண்டு விட்டதால் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு தண்ணீர் வந்து சேர வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story