ரூ.25 ஆயிரத்துக்காக 2 மாத குழந்தையை கடத்திய வாலிபர் கைது


ரூ.25 ஆயிரத்துக்காக 2 மாத குழந்தையை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2019 3:42 AM IST (Updated: 29 Jun 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

ரூ.25 ஆயிரத்துக்காக 2 மாத குழந்தையை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை மாகிம் ரெயில்நிலையம் வெளியே உள்ள நடைபாதையில் அர்ஜூன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அர்ஜூன், அவரது மனைவி மது மற்றும் பிறந்து 2 மாதமே ஆன இரட்டை குழந்தைகள் சந்து, கணேஷ் ஆகியோர் தூங்கி கொண்டு இருந்தனர்.

இதில் நள்ளிரவு 2 மணியளவில் மது எழுந்து பார்த்தார். அப்போது அருகில் தூங்கி கொண்டு இருந்த சந்துவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை எழுப்பினார். பின்னர் 2 பேரும் குழந்தையை தேடி தாதர் ரெயில்நிலையம் சென்றனர்.

அர்ஜூனின் உறவினர்கள் மாகிம் பகுதியில் குழந்தையை தேடினர்.

இந்தநிலையில் தாதர் ரெயில்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே போலீசாரிடம் குழந்தை காணாமல் போனது குறித்து அர்ஜூன் மற்றும் மது கூறினர். இதையடுத்து ரெயில்வே போலீசார் 2 குழுக்களை அமைத்து குழந்தையை தேடினர்.

அப்போது தாதர் ரெயில்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்துக்கு கீழ் வாலிபர் ஒருவர் குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் தம்பதியை அழைத்து வாலிபரின் கையில் இருந்த குழந்தையை காட்டினர். அப்போது அது அவர்களின் குழந்தை சந்து என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு தம்பதியிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபரை கைது செய்து மாகிம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மாகிம் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட வாலிபர் ஷாபாஸ் சேக் (வயது26) என்பதும், குழந்தையை கடத்தி கல்வா பகுதியில் ராஜூ என்பவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜூவை தேடி வருகின்றனர்.

குற்ற சம்பவம் நடந்த எல்லையை பற்றி கவலைப்படாமல் உடனடியாக செயல்பட்டு கடத்தப்பட்ட குழந்தையை 2 மணி நேரத்துக்குள் மீட்ட ரெயில்வே போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story