விருத்தாசலம் பகுதியில், கிராம சபை கூட்டம் - பெண்ணாடத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
விருத்தாசலம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்ணாடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர் தலைமை தாங்கினார். பணி மேற்பார்வையானர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பது, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக வீடுகளில் முறையற்ற வகையில் பயன்படுத்தும் குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து தீர்மான அறிக்கையில் கையெழுத்து இடுவதற்காக பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். அப்போது, இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா கேட்டு 7 ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய கிராம நிர்வாக அலுவலர் இந்த கிராம சபை கூட்டத்திற்கு வராததை வன்மையாக கண்டிக்கிறோம். இனிவரும் கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதுடன் தீர்மான அறிக்கையில் கையெழுத்திட மாட்டோம் என கண்டிப்புடன் கூறி விட்டு தீர்மான அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் தனிநபர் கழிவறையின் அவசியம் குறித்த சிறப்பு கையேட்டினை வெளியிட அதை பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகரன்-மங்கையற்கரசி தம்பதியினர், கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு திருமண பத்திரிகை அளித்தவர்களின் பத்திரிகைகளை சேகரித்து, பின்னர் அந்தந்த தம்பதிகளிடம் வழங்கினர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஒன்றிய அதிகாரி அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் பற்றி பேசப்பட்டது. அப்போது பொதுமக்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 16 நபர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டனர். அதற்கு ஊராட்சி செயலாளர் குமார், எங்கள் நிர்வாகத்திற்கு இது சம்பந்தமாக எதுவும் தெரியாது என கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஊராட்சி செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், மேலும் அம்மன் குளம், அய்யனார் குளம் உள்ளிட்ட ஏரிகளை தூர்வார வேண்டும், அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இக்கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் இறையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.என்.டி.யூ.சி. ராமலிங்கம், எஸ்மா கந்தசாமி, விநாயகமூர்த்தி, ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நரசிங்கமங்கலம் ஊராட்சியில் பணி மேற்பார்வையாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் செல்வராணி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ராமநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக தடைசெய்தல், அனைத்து குடியிருப்புகளுக்கும் கழிப்பறை வசதி அமைத்தல், டெங்கு விழிப்புணர்வு, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குடிசையில்லா ஊராட்சியாக மாற்றுதல்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story