துமகூரு அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து பெண்கள் உள்பட 7 பேர் சாவு


துமகூரு அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து பெண்கள் உள்பட 7 பேர் சாவு
x
தினத்தந்தி 29 Jun 2019 5:24 AM IST (Updated: 29 Jun 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு பெங்களூருவுக்கு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா அம்ருத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சித்தாபுரா கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5.15 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பின்னர் அந்த கார் சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்கள்.

மேலும் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் அம்ருத்தூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 4 பேரும் பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பெங்களூரு நந்தினி லே-அவுட் அருகே சஞ்சய்காந்தி நகரை சேர்ந்த செல்வி (வயது 45), நாகம்மா(40), கோவிந்தம்மா(48), பாஞ்சாலம்மா என்ற பாஞ்சாலி(40), பவானி(25), உமா(37) மற்றும் கார் டிரைவர் காளிதாஸ்(40) என்பது தெரிந்தது.

கடந்த பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்தது தெரியவந்தது. டிரைவர் உள்பட 11 பேர் தட்சிணகன்னடா மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று சாமி தரிசனம் செய்ததும், ஆன்மிக சுற்றுலாவை முடித்துவிட்டு காரில் பெங்களூருவுக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

காரை டிரைவர் அதிவேகமாகவும், கவன குறைவாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அம்ருத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடுப்பு சுவரில் கார் மோதி 7 பேர் பலியான சம்பவம் துமகூரு, பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.                                                                            

Next Story