பெரியாறு பாசன கால்வாயை நீட்டிப்பு செய்ய வேண்டும், 16 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்


பெரியாறு பாசன கால்வாயை நீட்டிப்பு செய்ய வேண்டும், 16 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 Jun 2019 3:00 AM IST (Updated: 29 Jun 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே சேக்கிப்பட்டி உள்பட 16 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலூர்,

மேலூர் தாலுகா பகுதி முல்லைப் பெரியாறு-வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதியாகும். மேலூர் தாலுகா பகுதியில் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பெரியாறு பாசன கால்வாய் செல்லும் நிலையில் சேக்கிப்பட்டியை மையமாக கொண்டு 16 ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்றளவும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. அருகிலுள்ள மேலவளவு பகுதி வரை பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல சேக்கிப்பட்டி அருகே உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நீட்டிப்பு கால்வாய் அமைத்து, பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதேபோல் சேக்கிபட்டி, பட்டூர் உள்பட 16 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், தங்களது பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் பெரியாறு பாசன கால்வாயை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டாம்பட்டி, கம்பூர், வலைச்சேரிபட்டி, சொக்கலிங்கபுரம், பள்ளபட்டி, கருங்காலக்குடி, தும்பைபட்டி, வஞ்சிநகரம் உள்பட 27 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் அபராதம் விதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய அலுவலர் குமாரவேல், எழுத்தர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ெரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி எழுத்தர் வரதராஜன், ஒன்றிய அலுவலர் சுமதி மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதேபோன்று அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த கூட்டத்தில் குடிநீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது, பசுமை வீடு திட்ட பயனாளிகள் தேர்வு உள்பட பல்வேறு பணிகள் தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய அலுவலர்கள், பொறியாளர்கள், கிராம மக்கள், மகளிர் குழுவினர், சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் கலந்துகொண்டார். இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மதுமதி, மதுரை மேற்கு தாசில்தார் கோபி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோனாபாய், கண்ணன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு துறையினர் கலந்து கொண்டனர். இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு, வீடுகள் தோறும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.

Next Story